(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸினால் கனேடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் கடந்த 8 ஆம் திகதி மார்க்-அன்ரூ இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் சுமார் 24 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் லிபியாவுக்கான வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
இதன்போது சிறந்த ஆட்சி நிர்வாகம், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி மார்க்-அன்ரூ செயற்பட்டார்.
அரசியல் விவகாரங்கள் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பல் திணைக்களத்தின் கீழ் 2016 - 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிதியத்துக்குப் பொறுப்பாக செயற்பட்ட மார்க்-அன்ரூ, உலகளாவிய ரீதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான முதலீடுகளை மேற்கொண்டார்.
அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக் கட்டமைப்பான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்திலும் அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்திருப்பதுடன், சர்வதேச நாடுகள் பலவற்றினதும் நிலைபேறான அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment