(இராஜதுரை ஹஷான்)
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தனி நபர் பயனாளர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நாளை (04) வெளியிடப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டம் குடும்ப பயனாளர்கள் மற்றும் தனி நபர் பயனாளர்கள் என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. குடும்ப பயனாளர்கள் தொடர்பான விபரம் கடந்த மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
குடும்ப அடிப்படையில் வெளியான பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் பிரதேச செயலகம் ஊடாக இந்த மாதம் 10 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதி இல்லாதவர்கள் நலன்புரித் திட்டப் பெயர்ப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடளிக்கலாம்.
மேன்முறையீடு, முறைப்பாடளிப்பதை தவிர்த்து விட்டு போராட்டங்களில் ஈடுபடுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் நலன்புரித் திட்டத்தின் பயன் சென்றடையும்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு அமைய தனி நபர் பயனாளர்கள் பகுதியில் விசேட தேவையுடைவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோர் தொடர்பான பெயர்ப்பட்டியல் நாளை வெளியிடப்படும். பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடு செய்யலாம் என்றார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் தொகுதி பெயர்ப் பட்டியல் வெளியாகி 10 நாட்களுக்குள் மாத்திரம் 5 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், 50,420 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அஸ்வெசும நலன்புரித் திட்ட சபை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment