இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய முத்துராஜா : ரஸ்ய விமானத்தில் தாய்லாந்துக்கு புறப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 2, 2023

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய முத்துராஜா : ரஸ்ய விமானத்தில் தாய்லாந்துக்கு புறப்பட்டது

சக்சுரின் யானையுடன் விசேட ரஸ்ய விமானம் தாய்லாந்து நோக்கி பயணமாகியது. இலங்கையிடம் வழங்கிய யானையை தாய்லாந்து சிகிச்சை புனர்வாழ்விற்காக மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

சக்சுரின் யானை தாய்லாந்திற்கு அனுப்புவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டுடன் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

22 வருடங்களிற்கு முன்னர் இலங்கைக்குக்கு வழங்கிய யானையை மீளப் பெற்று சிகிச்சைக்கு உட்படுத்த தாய்லாந்து தீர்மானித்துள்ள நிலையில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் யானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சியாங்மாய் நகரத்தை சென்றடையும் யானைக்கு அங்கு மிருக வைத்தியர்கள் சிகிச்சையளிக்கவுள்ளனர்.

ரஸ்யாவிலிருந்து வந்த விசேட விமானம் 4000 கிலோ யானையை கொண்டு சென்றுள்ளது. இதற்கான செலவு 700,000 டொலர் என தகவல்கள் வெளியாகின்றன.
இல்யுசின் ஐஎல் 76 சரக்கு விமானம் இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்கள் பௌத்த ஆலயத்தில் வாழ்ந்த யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மிருக வைத்தியர்கள் இந்த வாரம் மேற்கொண்டனர்.

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தின் அரச குடும்பம் அன்பளிப்பாக இந்த யானையை இலங்கைக்கு வழங்கியிருந்தது, அரசாங்கம் அதனை பௌத்த ஆலயத்திற்கு வழங்கியது பௌத்த ஆலயம் அதனை முத்துராஜா என பெயரிட்டு ஆலய உற்சவங்களில் பயன்படுத்தியது.

எனினும் ரார் எனப்படும் விலங்குகள் நலன் அமைப்பு யானையின் பராமரிப்பு குறித்து கரிசனை வெளியிட்டது. யானையின் முன்னங்காலில் காணப்படும் பிரச்சினை நீண்ட காலமாக புறக்கணிக்கப்படுகின்றது என தெரிவித்தது.

குறிப்பிட்ட அமைப்பு கடந்த வருடம் தாய்லாந்து அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என பரப்புரை செய்தது. இதனை தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகள் விகாரை அதிகாரிகளை யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அழகிய தந்தங்களை கொண்ட முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அதனை மீளவும் தமது நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பௌத்த ஆலயம் யானையை கடந்த வருடம் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்ப சம்மதித்தது. அங்கு யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டதுடன் அதனை விமானம் மூலம் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கான பயிற்சிகளும் இடம்பெற்றன.

யானை மிருகக்காட்சிசாலைக்கு வந்தவேளை இரண்டு பெரிய புண்கள் காணப்பட்டன. அவை குணமாகிவிட்டன. எனினும் மிருகக்காட்சிசாலையில் போதிய வசதிகள் இல்லாததால் முழுமையான கிசிச்சையை வழங்க முடியவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் யானைக்கு அக்குபன்சர் லேசர் கிசிச்சை ஹைட்டிரோதெரபி போன்றவற்றை வழங்கவுள்ளதாக தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த மிருக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை விசேட வாகனமொன்று சக்சுரின் யானையை தெஹிவளை மிருக்கக்காட்சிசாலையிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், யானைக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் மிக மெதுவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment