(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 500 வீதம் அதிகரித்து விட்டு தற்போது மிகவும் சொச்சக்கணக்கில் குறைத்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்க எடுத்த தீர்மானம் குறித்து தெரிவுக்குழு அமைக்குமாறு நாங்கள் தெரிவித்த பின்னரே இந்த கட்டண குறைப்பையும் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. என்றாலும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியுமான தொகைக்கு மின் கட்டத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) விசேட கூட்டமொன்றை முன்வைத்து மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்குமாறு சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டுள்ள மகஜர் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானம் குறித்து விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்குமாறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கைச்சாத்திட்டு மகஜர் ஒன்றை கையளித்திருந்தோம்.
அந்த நடவடிக்கை இன்னும் இடம்பெறாமல் இருக்கிறது. அதனால் தெரிவுக்குழு அமைக்கும் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் நூற்றுக்கு 500 வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நூற்றுக்கு 500 வீதம் மின் கட்டணம் அதிகரித்த அரசாங்கம் தற்போது மிகவும் சொச்சக்கணக்கில் மின் கட்டணத்தை குறைத்து மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரசாரம் செய்து வருகிறது.
இந்த சொச்சக்கணக்கிலாவது மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு மனம் திறக்கப்பட்டது, நாங்கள் தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு கோரியதன் பின்னராகும்.
அதனால் மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் விரைவாக தெரிவுக்குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனால் இன்னும் மின் கட்டணம் குறைவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மதஸ்தலங்களின் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே அரசாங்கம் 500 வீத மின்சார கட்டணத்தை அதிகரித்துவிட்டு, தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் மிகவும் சொச்சக்கணக்கில் மின்சார கட்டணத்தை குறைக்காமல், மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியுமான அளவுக்கு மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment