இலங்கை தொடர்பில் ஜப்பானுக்கு இருந்து வந்த சந்தேகம் நீங்கியுள்ளது - வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

இலங்கை தொடர்பில் ஜப்பானுக்கு இருந்து வந்த சந்தேகம் நீங்கியுள்ளது - வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதியின் ஜப்பான் பயணம் இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் ஜப்பானின் உதவிகளை பெற்றுக் கொள்ள தேசிய இணக்கப்பாட்டுக்காக அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் மூலம் இலங்கை தொடர்பில் ஜப்பானுக்கு இருந்து வந்த சந்தேகம் நீங்கியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் ஜப்பானுக்கான விஜயம் நாட்டின் அவிருத்திக்கு மிகவும் முக்கியமாகும். 2002ஆம் ஆண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து ஜப்பான் சென்று உதவி மாநாட்டில் பங்கேற்றார்.

ஆனால், 2004 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, உதவி மாநாடு முற்றாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, 2002 இல் பெறப்பட வேண்டிய சுமார் 3 பில்லியன் டாெலர்களை எமது நாடு இழந்தது.

அதேபோன்று ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலகு ரயில் சேவை வேலைத்திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்த வேலைத்திட்டத்தை கைவிட்டனர். அதனால் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

என்றாலும் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் இலங்கை மீதான ஜப்பானின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியதோடு, ஜப்பான் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இலங்கை தொடர்பில் ஜப்பானில் இருந்த அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தை நீக்கவும், தெளிவற்ற தன்மைகளை நீக்கவும் உதவியது.

இலகு ரயில் திட்டம் போன்றவற்றை மீண்டும் தொடங்கும் அளவுக்கு அந்த முடிவுகளை அவர் செயல்படுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரை, அவர் ஒரு வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளார் என்பதை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டுவது இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.

எனவே இனியாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நிலையில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு கட்டத்தில் ராஜபக்ஷவினரை திருடர்கள் என்று முத்திரை குத்திவிட்டு, பின்னர் ராஜபக்ஷவினரால் நியமிக்கப்பட்டவர்களை காப்பாற்ற பாராளுமன்றத்தில் வாக்களித்து இரட்டை வேடத்தை கடைபிடிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கான எதிர்காலத்தை தயார்படுத்துவதற்கு இவர்கள் அனைவரும் இந்த இரட்டை வேடத்தை விட்டு, இந்த நாட்டின் தேசிய இணக்கப்பாடுகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment