சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் - எஸ்.எம்.மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

ஒளி/ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம். தேசிய பொருளாதாரம் எனக்கூறி ஊடகங்களின் குரலை முடக்குவதற்கு இடமளிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இதுவரை காலமும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி ஊடகங்களின் குரலை முடக்கிய அரசாங்கம் இன்று பொருளாதார பாதுகாப்பு எனக்கூறி அந்த முயற்சியை தொடர்கின்றது. இதனை நோக்கமாகக் கொண்டே ஒளி/ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை. அதேபோன்று இம்முறையும் அதனை தோற்கடிப்போம்.

ஊடகங்கள் தவறான செய்திகளை அல்லது போலியான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே அதற்கு புதிதாகவொரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக ஒளி/ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம். அன்றாட உலகை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஒவ்வொரு நாளும் தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து செய்திகளையும் மக்களுக்கு வழங்குவதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் காணப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment