அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி/ஒளி பரப்பு சட்டமூலம் - கெவிந்து குமாரதுங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி/ஒளி பரப்பு சட்டமூலம் - கெவிந்து குமாரதுங்க

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி மற்றும் ஒளிபரப்பு அதிகார சபை சட்டத்தை இயற்ற ஆரம்பகட்ட நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

பொரள்ளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்.

நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் தமது அரசியல் இருப்புக்காக ஜனாதிபதியின் சகல செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சமூக கட்டமைப்பில் ஏழ்மை, தொழிலின்மை ஆகிய பிரச்சினைகள் நாளுக்குநாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றன. நடுத்தர மக்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

பாராளுமன்றத்தில் எவ்வித வாதப்பிரதிவாதங்கள் இன்றிய நிலையில் திறைசேரி உண்டியல்களின் எண்ணிக்கை 5000 பில்லியன் ரூபா முதல் 6000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையான முறையில் செயற்படுகிறார்.

நாட்டு மக்களின் கவனத்தை ஒட்டு மொத்தமாக திசைதிருப்பும் வகையில் அரசாங்கம் ஒரு சில செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளது.

பௌத்த மதத்துக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அரசாங்கத்தின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஒளி மற்றும் ஒலி பரப்பு அதிகார சபை சட்டமூலத்தை இயற்ற அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு இந்த சட்டமூலத்தை இயற்ற ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment