(இராஜதுரை ஹஷான்)
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்திருந்தால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் நிலைத்திருந்திருக்கும். பொதுஜன பெரமுனவை புறக்கணித்து இனிவரும் காலங்களில் எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அளுத்கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்கள் எதிர்பார்த்தை எம்மால் நிறைவேற்ற முடியவில்லை.
நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது. அரச தலைவர் எடுத்த ஒரு சில தீர்மானங்களால்பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டபய ராஜபக்ஷவிற்கு இருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும். பொருளாதார பாதிப்பு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினார்கள். மக்கள் போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்பட ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது. எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment