புலம்பெயர் தமிழர்களுடனான நல்லுறவை சீர்குலைப்பதே பிரதான நோக்கம் : அலி சப்ரியின் கருத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 5, 2023

புலம்பெயர் தமிழர்களுடனான நல்லுறவை சீர்குலைப்பதே பிரதான நோக்கம் : அலி சப்ரியின் கருத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டனம்

(நா.தனுஜா)

தமிழ் அரசியல் தலைவர்கள் புலம்பெயர் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிடக் கூடாது என்று அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரித்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இக்கருத்து அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் இலங்கையில் நிரந்தர தீர்வொன்று எட்டப்படுவதை இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்றும், மாறாக தத்தமது தேசங்களில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே புலம்பெயர் குழுக்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் தமிழ் அரசியல் தலைமைகள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

இருப்பினும் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இது குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை என்பது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் இந்திய வாழ் தமிழ் மக்கள் ஆகிய முத்தரப்பினரின் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், எனவே இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் மீண்டுமொரு மோதல் உருவாக வேண்டும் என்ற புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக அவர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வையே கோருகின்றனர். அவ்வாறிருக்கையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்கக்கூடிய அலி சப்ரியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது, இவ்விடயம் பற்றிய அழுத்தங்கள் மிகவும் வலுவானதாக மாறிவருகின்றன. 

அந்த அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அண்மையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவர் படிப்படியாக உளநோயாளியாக மாறிவருகின்றார். 

முன்னாள் போராளிகளைப்போன்று அவருக்கும் புனர்வாழ்வு மற்றும் உளவள ஆலோசனை ஆகியவற்றை வழங்க வேண்டியிருக்கின்றது. அதன் மூலமாகவேனும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மோதலின் பின்னரான இன ஐக்கியம் ஆகியவற்றின் உண்மையான தாற்பரியம் குறித்தும் அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் அவர் அறிந்துகொள்ளட்டும்.

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இன சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரே நேர்கோட்டில் ஒருமித்துப் பயணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் கவனமாக இருந்துவந்திருப்பதுடன் அதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாங்கத்தினால் அமைச்சர் அலி சப்ரியும் ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றார் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அமைச்சர் அலி சப்ரி இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன், அக்கருத்தை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

'புலம்பெயர் தமிழ் மக்கள் எமக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் அதற்குப் பதிலாக அவர்களது தேவைக்கேற்றவாறு அல்லது நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. மாறாக நாம் எமது நாட்டின் நிலைவரத்தைக் கருத்திற் கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்றிவருகின்றோம்.

அவ்வாறிருக்கையில் நாம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனோ அல்லது மக்களுடனோ இணைந்து செயற்படக்கூடாது என்று கூறுவதாக இருந்தால், முதலில் எமது பிரச்சினைக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்குரிய திட்டத்தை எம்மிடம் கையளிக்க வேண்டும். அதனைவிடுத்து இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை' என்றும் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

'சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்திலிருந்து கிட்டும் ஓர் பதவிக்காக அவர் வெளியிடுகின்ற இத்தகைய கருத்துக்கள், சிறுபான்மையின தமிழர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும். 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வையும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையுமே கோருகின்றார்கள். இலங்கையின் ஒற்றையாட்சி முறை மற்றும் அதன் கீழ் நிகழ்ந்த அடக்குமுறைகளின் விளைவாகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். 

எனவே அமைச்சர் அலி சப்ரி தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பேசுவதைவிடுத்து ஓர் சட்டத்தரணி என்ற ரீதியில் உண்மையைப் புரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் பேச வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment