“தேடுதல் வேட்டை இன்னும் முடியவில்லை,” என்று கொலம்பியாவின் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஒரு விமான விபத்தில் சிக்கி, 40 நாட்கள் அமேசன் அடர் காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதை, கொலம்பியா கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தத் தென் அமெரிக்க நாட்டின் இராணுவமோ தொலைந்து போனவர்களில் கடைசியாக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. வில்சன் என்று பெயரிடப்பட்ட மீட்பு நாய்தான் அந்த ஒருவர்.
தொலைந்துபோன குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான தடயங்களைக் கண்டறிய மிகவும் உதவியாக இருந்தது ஆறு வயதான இந்த பெல்ஜியன் ஷெபர்ட் வகை நாய். கொலம்பியாவின் தேசிய இராணுவம் டிவிட்டரில் இத்தகவலைப் பகிர்ந்திருக்கிறது.
காட்டுக்குள், ‘குழந்தைகளின் கால் தடங்கள்’ என்று கருதப்பட்ட சிறிய மனிதக் கால் தடங்களுக்கு அருகில், ‘நாயின் கால் தடங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம், இந்த நாயும் குழந்தைகளுடன் சில காலம் இருந்திருக்கலாம் என்று இராணுவம் எண்ணுகிறது.
ஆனால் இப்போது வில்சன் என்னும் இந்நாய் தொலைந்து போய்விட்டது. மோசமான வானிலை மற்றும் பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டில் அது தொலைந்து போனதாகச் சொல்லப்படுகிறது.
'யாரையும் கைவிடுவதில்லை' என்னும் கொள்கையின்படி, மீட்புப் படையினரில் ஒருவர் தொலைந்து போயிருந்தால் எப்படித் தேடுதல் வேட்டை நடக்குமோ, அதேபோல வில்சனையும் தேடி வருவதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.
முதல் தடயத்தைக் கண்டுபிடித்த வில்சன்
கொலம்பியாவின் அமேசன் காடுகளில் சிக்கியிருந்த நான்கு பழங்குடிக் குழந்தைகளான லெஸ்லி, சொலெய்னி, தியென், மற்றும் க்றிஸ்டின் ஆகியோரை மீட்கும் பணியின்போது வில்சன் தொலைந்துபோனது.
குழந்தைகள் ஜுன் 9ஆம் திகதி இராணுவம் மற்றும் சில பழங்குடி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நாட்டின் தலைநகரான பொகோடாவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகளைத் தவிர, அவர்கள் பயணித்த விமானத்திலிருந்த அனைவரும் குழந்தைகளின் தாய், விமானி மற்றும் ஒரு பழங்குடித் தலைவர் விபத்தில் இறந்தனர்.
மீட்புப் பணிகளில் நாயின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது, என்கின்றனர் ராணுவத்தினர். மார்ச் மாதம் 15ஆம் திகதி காட்டுச் செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்தது வில்சன். இதுவே அக்குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.
வில்சன் தொலைந்துபோன தகவலை கொலம்பிய இராணுவம் சென்ற வியாழக்கிழமை தெரிவித்தது.
“சிக்கலான காட்டு நிலப்பரப்பு, ஈரப்பதம், மற்றும் மோசமான வானிலை காரணமாக அது வழிதவறிப் போயிருக்கலாம்,” என்று இராணுவம் தெரிவித்தது.
வில்சன், மற்ற அனைவருக்கும் முன் குழந்தைகளிடம் சென்று, அவர்களுடன் சில காலம் இருந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள், காட்டில் இருந்தபோது ‘ஒரு நாயைச்’ சந்தித்ததாகக் கூறினர் என்று, கொலம்பியா அரசின் குடும்ப நல நிறுவனத்தின் இயக்குநர் ஆஸ்ட்ரிட் காசெரெஸ் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அது வில்சன் தானா என்று சொல்லவில்லை.
‘தொலைந்துபோன ஒரு நாய்க் குட்டி தங்களுக்குத் துணையாகச் சில காலம் இருந்தது, ஆனால் இப்போது அது எங்கு இருக்கிறதென்று தெரியவில்லை’ என்று குழந்தைகள் சொன்னதாகக் காசெரெஸ் தெரிவித்தார்.
இதனோடு சேர்ந்து இராணுவத்தினர் காட்டுக்குள் கண்டுபிடித்த நாயின் கால் தடங்களும் முக்கியமான ஆதாரங்கள்.
முப்படைத் தளபதி ஹெல்டெர் ஃபெர்னான் கிரால்டோ, மீட்கப்பட்டக் குழந்தைகளை மருத்துவமனையில் சந்திக்கச் சென்றிடுந்தார்.
அப்போது, லெஸ்லி, சொலெய்னி ஆகிய பெண் குழந்தைகள் சில படங்களை வரைந்து காட்டியதாகவும், அவற்றில் இருந்த நாய் 'வில்சனைப்போல தோற்றம் கொண்டிருந்ததாகவும்' அவர் சொன்னார்.
இந்த ஓவியங்கள் ‘நமது நான்கு கால் நண்பனின்’ அசாத்திய முயற்சிக்கான சான்று, என்றும் வில்சன் ‘கைவிடப்பட மாட்டான்’ என்றும் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment