நான்கு மாதங்களில் 667 வீதி விபத்துக்களில் 709 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 13, 2023

நான்கு மாதங்களில் 667 வீதி விபத்துக்களில் 709 பேர் உயிரிழப்பு

(எம்.வை.எம்.சியாம்)

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் நாடளாவிய ரீதியில் 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 667 வீதி விபத்துக்கள் என்பதுடன் இதன்போது 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் 30) 8,202 வெவ்வேறு விதமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 2,160 பாரதூரமான விபத்துகளும், 3,201 சிறு விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த விபத்துகளில் 667 வீதி விபத்துக்கள் என்பதுடன் இதன்போது 709 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வீதி விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என்பதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த 102 பேர் இதன்போது உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 179 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களால் ஏற்படுகின்றன. இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகள் மூலம் இடம்பெற்றுள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டுள்ள மொத்த வீதி விபத்துக்களை கவனத்திற் கொள்ளும்போது பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பான விபத்துக்கள் என இனங்காணப்பட்டுள்ளது .

எனவே மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment