மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் டெங்கு நோய் பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெங்கு நோயினால் நாளாந்தம் 328 பேரும் வாராந்தம் 2500 பேரும் பாதிக்கப்படுவதாகவும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் 67 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் இன்று வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளிகள் 43,346 பேர் பதிவாகியுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் டெங்கு நோயினால் பதிவாகியுள்ளோரின் எண்ணிக்கையில் 25 வீதமானோர் சிறுவர்கள் என்றும் அதனைக் கவனத்திற் கொண்டு பாடசாலைகளில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டெங்கு நோய் பரவல் தொடர்பில் இன்றையதினம் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க நாட்டில் 67 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி. குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9,638 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் இம்மாதத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 3,557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கிணங்க, கொழும்பில் 9,257 பேரும், கம்பஹாவில் 9,638 பேரும், களுத்துறையில் 2,759 பேரும், கண்டியில் 2,478 பேரும், குருநாகலில் 1,555 பேரும், புத்தளத்தில் 2,634 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை தொடரும் நிலையில் நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அதனைக் கவனத்திற் கொண்டு நீர் தேங்கியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு உருவாகுதல் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம் மற்றும் கொத்தட்டுவ பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, ஜூன் மாத இறுதிக்குள் டெங்கு தொற்று தீவிரமடைந்து கடுமையான தொற்றுநோய் நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கக்கூடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
கடந்த வருடம் முழுவதும் 76,689 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியிருந்ததுடன் 72 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மேல் மாகாணத்தில் எதிர்வரும் 14, 15, 16 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment