ஜனாதிபதி தனித்து செயற்பட்டால் அவரை பின் தொடர மாட்டோம் : பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே என்கிறார் சனத் நிஷாந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

ஜனாதிபதி தனித்து செயற்பட்டால் அவரை பின் தொடர மாட்டோம் : பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே என்கிறார் சனத் நிஷாந்த

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின் தொடர மாட்டோம். ஏனெனில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவிடமே உள்ளது. அரசாங்கத்தின் சகல கொள்கைகளையும் செயற்படுத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை முக்கியமானது என்பதை சகலரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என நீர் வழங்கல் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் புதன்கிழமை (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க மாவட்ட சிரேஷ்ட தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே எமது மாவட்டத் தலைவர்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுமாயின் அது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர்தான் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அச்சமில்லாமல் வீதிக்கு இறங்கி செல்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

யுத்த காலத்திலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் கலவரத்தின்போதும் நாங்கள் தைரியமாக வீதியில் நடமாடினோம். போராட்டக்களத்தில் இருந்த போதைப் பொருள் அடிமையாளர்களுக்கு நாங்கள் அச்சமடையப் போவதில்லை. எமது பாதுகாப்புக்காக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின் தொடர்ந்து செல்லப் போவதில்லை. அரசாங்கத்தின் கொள்கைகளை செயற்படுத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை முக்கியமானது என்பதை சகலரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிகாரத்தில் இருப்பதற்கும், எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment