இன்று (12) அதிகாலை வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸ - அலவ்வ வீதியின் துல்ஹிரிய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பேபுஸ்ஸ திசையிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீடொன்றுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ரம்புக்கணை, கொட்டவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதான கீத்ம தத்சர எனும் தந்தை, 39 வயதான தினேஷா ஶ்ரீனானி எனும் தாய், 13 வயதான தனுஷ்க கயான் எனும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியை தந்தையே செலுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் 39 வயதான டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அசமந்தமான மற்றும் பாதுகாப்பற்ற வாகன செலுத்துகையே விபத்துக்கு காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment