ஜனாதிபதியை பகைத்துக் கொள்ளப் போவதில்லை : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

ஜனாதிபதியை பகைத்துக் கொள்ளப் போவதில்லை : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை வழங்காத காரணத்தால் ஜனாதிபதியை பகைத்துக் கொள்ளப் போவதில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். தேர்தல் ஊடாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு எஸ்.எம். சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க ஆகிய சிரேஷ்ட உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். ஆட்சியில் இருக்கும்போதும், ஆட்சியில் இல்லாதபோதும் இவர்கள் ராஜபக்ஷர்களுடன் இருந்தார்கள்.

பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததை தொடர்ந்து நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய கட்சி எடுத்த தீர்மானத்துக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

நாடு தற்பொழுது வழமைக்கு திரும்பியுளள நிலையில் நிலையான அமைச்சரவை ஸ்தாபிப்பு இழுபறி நிலையில் உள்ளது. நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். இதனை தவறு என்று குறிப்பிட போவதில்லை.

அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் ஜனாதிபதியை பகைத்துக் கொள்ளப் போவதில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment