ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை : மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை : மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை என்றும், உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கும் ஆங்கில மொழி பிரிவுக்கும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே இன்று புதன்கிழமை (14) காலை கல்லூரி முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியானது நுவரெலியா மாவட்டத்தில் அதிக மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பும் கல்லூரியாகும். ஆனால் இப்போது இந்த கல்லூரியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சில கல்வி அதிகாரிகள் நல்லாசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றிவிட்டு தகுதியில்லாத ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.

ஆங்கில பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கின்றனர். உயர்தர கணித விஞ்ஞான பிரிவுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
கல்லூரியின் வளர்ச்சியைப் பிடிக்காத சில பெரும்பான்மை கல்வி அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வலயக் கல்வி பணிப்பாளர் செயற்படுகின்றார். இது குறித்து அவரிடம் கதைத்தும் சரியான பதில் தரவில்லை.

மேலும், இந்த அநியாயங்களை பார்த்துக் கொண்டு நுரெலியா மாவட்ட தமிழ் அமைச்சர்கள், எம்.பிக்களும் அமைதியாக இருப்பதை காணும்போது இதன் பின்னணயில் இவர்களும் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் இது குறித்து பேசுவதற்கு நாம் தமிழ் எம்.பி ஒருவரை அழைத்தும் அவர் இறுதி வரை அந்த சந்திப்புக்கு வரவில்லை.

எனவே, இதற்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். நாம் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் இப்படியான கல்லூரிக்கு பொருத்தமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றே கூறுகிறோம்.

நாம் எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு யோசிக்கின்றோம். அடுத்த வருடம் வலயக் கல்வி பணிப்பாளர் ஓய்வு பெற்று சென்று விடுவார். ஆனால் கல்லூரிக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பதில் கூறப்போகின்றார்கள்? எமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பேற்பது என்று தெரிவித்தனர்.

கே. கிஷாந்தன்

No comments:

Post a Comment