நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது : அச்சம் கொள்ள வேண்டாம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது : அச்சம் கொள்ள வேண்டாம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நொதேண் பவர் அனல்மின் நிலையம் எனக்குத் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இரண்டாவது கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் கழிவு ஓயில் பிரச்சனையை ஏற்படுத்திய நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்படும் என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகின்றது.

நொதேன் பவர் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட கழிவு ஓயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக 20 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.

ஆனால் குறித்த நிதியை இன்னும் பலர் பெறாது இருக்கிறார்கள், அதற்குக் காரணம் நிதியை பெற்றுக் கொண்டால் குறித்த நிறுவனம் மீளச் செயற்படும் என்ற அச்சமே எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நொதேன் பவர் நிறுவனம் மீள இயங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டது உண்மை.

ஆனால் நான் உறுதியாக கூறுகிறேன், யாழில் எனக்கு தெரியாமல் குறித்த நிறுவனம் மீள செயல்பட முடியாது, அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபை அமைத்தலைவர் சி வி கே சிவஞானம் மற்றும் திணைக்களத்தின் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் பொது அமைப்பினரின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment