இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட 33 கிலோ தங்கம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட 33 கிலோ தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட 33 கிலோ தங்கக் கட்டிகளை சுழியோடிகளின் உதவியுடன் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இக்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்துள்ளதாக, இந்திய வருவாய்த் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து படகில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து கடந்த புதன்கிழமை அதிகாலை வருவாய்த் துறையின் புலனாய்வுப் பிரிவினரும் இந்திய கடலோரக் காவல் படையினரும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இராமநாதபுரம், மண்டபம் அருகே கடலில் அதிவேகத்துடன் வந்த இரண்டு கண்ணாடி இழைப் படகுகளை கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, படகிலிருந்த வேதாளையைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததாகவும் அவற்றை கடலில் வீசி விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் தனித்தனியாக 2 படகுகளில் சோதனை நடத்தினர். அதில் ஒரு படகிலிருந்து 22 கிலோ 269 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை சுழியோடிகள் மண்டபம் அருகே கடலில் தங்கக் கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாக்கு மூட்டை ஒன்றை மீட்டனர். இதில் 10 கிலோ 420 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன.

இதுவரை மொத்தம் 32 கிலோ 689 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கண்ணாடி இழைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

கடலில் வீசியதில் தேடிப்பிடித்த தங்கக் கட்டிகள், வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக் கட்டிகளென மொத்தம் சுமார் 33 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளன.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

No comments:

Post a Comment