(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் ஒருமைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே பாதுகாக்க முடியும். ஜனாதிபதி பதவியையும், பாராளுமன்ற அதிகாரத்தையும் நாங்களே கைப்பற்றுவோம். தேர்தல் ஊடாக எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஆட்சியதிகாரத்தை ஏற்கவும் அதிகாரத்தை துறக்கவும் ராஜபக்ஷர்கள் தயாராகவே உள்ளார்கள்.
2022 ஆம் ஆண்டு தவறான சித்தரிப்புக்களினால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. ஜனநாயக போராட்டத்தை ஒரு தரப்பினர் பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.
அரசியலமைப்பின் பிரகாரம் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்.
நெருக்கடியான சூழலில் நாட்டுக்காக எடுத்த அரசியல் தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எக்காரணிகளுக்காகவும் பொதுஜன பெரமுன தனது தனித்துவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
நாட்டின் ஒருமைப்பாட்டை ராஜபக்ஷர்கள் பாதுகாத்தார்கள். ஆகவே இனிவரும் காலங்களிலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பொதுஜன பெரமுனவே பாதுகாக்கும்.
அரசியல் காரணிகளுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் என்றும் உறுதியாக இருப்போம்.
எதிர்வரும் காலங்களில் எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் அதனை சிறந்த முறையில் எதிர்கொள்வோம்.
ஜனாதிபதி பதவியையும், பாராளுமன்ற அதிகாரத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே கைப்பற்றும். தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment