பௌத்த மத மரபுரிமைகள் தொர்பில் தீர்மானம் எடுக்கவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது : ஜயந்த சமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 13, 2023

பௌத்த மத மரபுரிமைகள் தொர்பில் தீர்மானம் எடுக்கவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது : ஜயந்த சமரவீர

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். பௌத்த மத மரபுரிமைகள் தொர்பில் தீர்மானம் எடுக்கவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையில் பௌத்த மதம் 2500 ஆண்டு கால வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் பௌத்த மரபுரிமைகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் புராதன தொல்பொருள் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதி தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குப்பற்றலுடன் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முன்னிலையில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தோற்றுவித்துள்ளார்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அநுர மஹதுங்கவை அரச அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக சாடியுள்ளார்.

குருந்தூர் அசோக விகாரை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த போலியான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை கடுமையாக சாடியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு இல்லாத வரலாற்றை உறுதிப்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார். 'நில அளவை கல்லை அகற்றுங்கள் இல்லாவிடின் நான் அகற்றவா,? என ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தையும், அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளார். தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொண்டே அனுர மஹதுங்க பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக செயற்படவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும், கடுமையாக விமர்சிக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை கிடையாது.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவியில் மிகுதி காலத்தை நிறைவு செய்வதற்காக பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment