(எம்.மனோசித்ரா)
உலகில் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங்கை இராணுவ வைத்தியர்கள் கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் மூலம் உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி இராணுவ வைத்தியர்கள் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளனர்.
இதுவே உலகளாவிய ரீதியில் சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த மிக விசாலமான கல் என்பதனால், அதனை அகற்றியமை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதியப்பட்டதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிரேஷ்ட சிறுநீரக மருத்துவர் லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையிலான கப்டன் வைத்தியர் டபிள்யு.பீ.எஸ்.சீ. பதிரத்ன மற்றும் வைத்தியர் தமன்ஷா பிரேமதில உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மயக்க மருந்து நிபுணர்களான வைத்தியர் கேர்ணல் யு.ஏ.எல்.டீ. பெரேரா மற்றும் கேர்ணல் சீ.எஸ். அபேசிங்க ஆகியோர் இந்த சத்திரசிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இந்த சிறுநீரகக் கல் 13.372 சென்டி மீற்றர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாகும்.
சத்திர சிகிச்சையில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் இராணு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.ஏ.சீ. பெர்னாண்டோ மற்றும் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் கேணல் கே. சுதர்ஷன் ஆகியோரால் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியகேவிடம் காண்பிக்கப்பட்டது.
கின்னஸ் உலக சாதனையின் தரவுகளுக்கமைய, கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவில் 13 சென்டி மீற்றர் அதிக நீளம் கொண்ட சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அதேபோன்று 2008 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானில் 620 கிராம் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஆனால் இலங்கையில் இராணுவ வைத்தியர்களால் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ள இந்த சிறுநீரகக் கல் 13.372 சென்டி மீற்றர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதால் ஏனைய இரண்டையும் விட பெரியதாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சத்திர சிக்சை மேற்கொள்ளப்பட்ட நபர் உடல் நலத்துடன் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment