அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து கட்டாயம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும் : கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து கட்டாயம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும் : கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

தேர்தலில் களமிறங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை என்ற போதிலும், விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து கட்டாயம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையோ, பொறுப்போ அரசாங்கத்துக்கு கிடையாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அஞ்சுபவர்கள் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார்கள்?

தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அரசாங்கம் அதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை நிறைவேற்றாமையின் காரணமாக, நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக உயர் நீதிமன்ற நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களுக்கு அழைத்து விசாரிக்க முயற்சிக்கப்பட்டது.

மறுபுறம் அரசாங்கம் சர்வதேசத்திடம் கையேந்திக் கொண்டிருக்கிறது. உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கு வெளிநாடுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ள போதிலும், நாட்டை கட்டியெழுப்புவதற்கான கடன் உதவிகள் எந்த நாட்டிடமிருந்தும் கிடைக்கவில்லை.

கடன் மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். சீனா முழுமையான விருப்பத்தை தெரிவிக்கும் வரை கடன் மறுசீரமைப்புக்கள் கேள்விக்குறியாகும்.

சட்டம் முறையாக பின்பற்றப்படாத இந்த நாட்டில் முதலீடுகள் கிடைக்காது. தேசிய சொத்துக்களை விற்பது முதலீடுகளாகாது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் பாரிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும். இந்தக் கூட்டணி தொடர்பில் சிலருடன் பகிரங்கமாகவும், பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய அடுத்து இடம்பெறும் எந்தவொரு தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான புதிய கூட்டணியிலேயே போட்டியிடுவோம்.

தற்போது அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளனர். சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக கூறினாலும், பெரும்பாலானோர் எதிர்க்கட்சியில் அமர்ந்து ஆட்சியை கைபற்றுவோம் என கூறிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும். அந்த சந்தர்ப்பத்தில் கட்டாயம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும். ஆனால், இறுதி வரை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறாது என்றார்.

No comments:

Post a Comment