(எம்.மனோசித்ரா)
நாட்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 41,581 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 25 மரணங்களும் பதிவாகியுள்ளன. மழைக் காலநிலையுடன் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் கூடும். எனவே சகலரும் தமது சுற்றுச்சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார்.
அத்தோடு 11 மாவட்டங்களிலுள்ள 67 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதியுயர் அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 41,581 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். வாராந்தம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இவர்களில் 49 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கண்டி, நுவரெலியா, திருகோணமலை, மட்டக்களப்பு, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் மாத்திரமே கனிசமானளவு டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஆனால் மேல் மாகாணம் முழுவதிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டில் மாத்திரம் 25 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த 22 ஆவது வாரத்தில் கொழும்பில் மாத்திரம் 507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை களுத்துறையில் 193, கம்பஹாவில் 519 என டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதற்கமைய 67 சுகாதார மருத்துவ பிரிவுகள் அதிக அபாயம் மிக்க மாவட்டங்களாகப் பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, பொலன்னறுவை, கண்டி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலேயே குறித்த அதிஅபாய வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
2017 இல் ஒரு இலட்சத்து 86,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் பின்னர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் வீதம் குறைவாகக் காணப்பட்டாலும், இவ்வாண்டில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு காணப்படுகிறது.
மழைக் காலநிலை ஆரம்பித்த பின்னர் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஊகிக்கப்படுகிறது. எனவே அதற்கு இடமளிக்காத வகையில் அனைவரும் தமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment