(எம்.மனோசித்ரா)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நுகேகொட - விஜேராம சந்திக்கு அருகில் இவ்வாறு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியருகில் 100 மீட்டர் தூரம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை முன்னேறவிடாது தடுக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித் தடைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டு கோட்டை, கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.
அதற்கமைய அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்தோடு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும், பொதுமக்களை தூண்டும் வகையில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பவற்றை மீளப் பெறுமாறும் வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment