சுங்க அதிகாரிகளை ஏமாற்றி 35 கோடி ரூபா பெறுமதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்கள் இறக்குமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

சுங்க அதிகாரிகளை ஏமாற்றி 35 கோடி ரூபா பெறுமதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்கள் இறக்குமதி

பயன்படுத்தப்பட்ட பொருட்களென சுங்கத் திணைக்களத்துக்கு அறிவித்துவிட்டு நாட்டுக்குள் கொண்டுவந்த சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள், சிகரெட், மதுபானம், வாசனை திரவியங்களை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்பு பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.

கொழும்பு, ஒறுகொடவத்தையிலுள்ள சுங்கத் திணைக்களத்தின் கொள்கலன் கட்டுப்பாட்டுப் பிரிவில் 40 அடி கொள்கலனொன்று நேற்று ஊடகங்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டன.

கொண்டு வரப்பட்ட பொருட்களில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான Toyota Allion மற்றும் இரண்டு Toyota Prius கார்கள், கழற்றி உதிரிப் பாகங்களாக கொண்டு வரப்பட்டிருந்தன.

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான Manchester வெளிநாட்டு சிகரெட்டுகள், 16 மில்லியன் ரூபா பெறுமதியான 69 VAT மதுபான போத்தல்கள், சுமார் 18 மில்லியன் ரூபா பெறுமதியான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்தினர் கையகப்படுத்தினர்.

இந்த பொருட்கள் சுங்கத்துக்கு அறிவிக்கப்படாமையால் அரசாங்கத்துக்கு சுமார் 22 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிமல் சமரதுங்க தெரிவித்தார்.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கத் திணைக்கள வருவாய் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிமல் சமரதுங்கவின் மேற்பார்வையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் நளின் பிரேமரத்னவின் வழிகாட்டலின் கீழ், சுங்க அத்தியட்சகர்களான சி.எஸ்.விக்கிரமரத்ன, ஏ.டபிள்யூ.எல்ல சி.வீரகோன், பொறுப்பதிகாரி அருண அமரசிங்க, உதவி சுங்க அத்தியட்சகர்கள், சுங்க பரிசோதகர்கள் மற்றும் சுங்க ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

படங்கள் : சுலோச்சன கமகே

No comments:

Post a Comment