இறக்குமதிப் பொருட்களுக்கான தடைகள் மேலும் நீக்கப்படவுள்ளன. சுமார் முன்னூறு பொருட்களுக்கான தடைகளே நீக்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனடிப்படையில், இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கான பட்டியல் 1216 ஆக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் பேசிய இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டு, அரசாங்கம் சில தீர்மானங்களை மேற்கொண்டது. இத்தீர்மானத்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
நாட்டின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் வெளிநாட்டு கையிருப்பை பாதுகாப்பதற்குமே, சில தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டது.
அந்த வகையில் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியமை, வட்டி வீதத்தை அதிகரித்தமை, இறக்குமதி கட்டுப்பாட்டை மேற்கொண்டமை உள்ளிட்ட தீர்மானங்களை குறிப்பிட முடியும். அரசாங்கம், அப்போது மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனை இப்போது நாம் பெற முடிகின்றது.
வெளிநாட்டு அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இப்போது 24.9 மில்லியன் டொலராகவிருந்த அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 45.4 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பண வீக்கம் 70 வீதத்திலிருந்து 25.5 விதமாக குறைவடைந்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டுக் கையிருப்பு மூன்று பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. வங்கி வட்டி வீதம் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலன்களை மக்களும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment