அதிகாரப்பகிர்வு பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட வேண்டும் : அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

அதிகாரப்பகிர்வு பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட வேண்டும் : அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களில் பங்கேற்ற அமைச்சர் நஸீர்அஹமட், எந்தச் சமூகங்களுக்கும் அநீதியிழைக்கப்படாத வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அமைவது அவசியம் என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற எனக்கு முஸ்லிம்கள் சார்பில் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிச் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முஸ்லிம்களும் அதிகளவை எதிர்கொள்கின்றனர். போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களில் முஸ்லிம்களும் பிரதானமானவர்கள்.

எனவே, இழக்கப்பட்ட காணிகள், இருப்புக்களுக்கான உத்தரவாதம், தேசிய இனத்துக்கான தனித்துவ அடையாளங்கள் என்பவை முஸ்லிம்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்படல் அவசியம். இது, இனப் பிரச்சினைக்கான தீர்வில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சகோதர சமூகங்களின் அபிலாஷைகளில் குறுக்கிடுவதாக இது அமையாது. இது பற்றிய புரிதல்களை தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதற்கு எதிர்காலப் பேச்சுக்களில் முஸ்லிம் தரப்புக்களும் அழைக்கப்படுவது அவசியம்.

மாகாண சபைத் திருத்தச் சட்டங்களில் முஸ்லிம்களுக்கு சந்தேகம் நிலவுகிறது. பிரதிநிதித்துவங்களை குறைக்கும் வகையில், இத்திருத்தங்கள் இருத்தலாகாது. அவ்வாறிருப்பது, முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்யும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment