ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஆதரவு - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஆதரவு - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலை முன்னரே நடத்துவதற்கு தேவையான சட்டமூலங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும். சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து ஜனாதிபதித் தேர்தல் சவாலை ஏற்பதற்குத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) கூடிய எதிர்க்கட்சிகளின் சர்வ கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கு அதன் நிகழச்சி நிரலுக்கு ஏற்ப தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அது ஜனநாயக ரீதியான செயற்பாடல்ல. ஜனாதிபதியினதும், அவருக்கு ஆதரவளிப்பவர்களதும் தேவைக்கேற்ப தேர்தலை நடத்த முயற்சிப்பது தவறாகும்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதித் தேர்தலை முன்னதாகவே நடத்துவதற்கான யோசனைக்கு நாம் எமது அனுமதியையும், ஆதரவையும் வழங்குவோம். அதற்கேற்ப ஜனாதிபதித் தேர்தலை வெகு விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டமூலங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

ஜனாதிபதித் தேர்தல் சவாலை ஏற்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். சகல எதிர்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, தேசிய கொள்கையை கேந்திரமாகக் கொண்ட பயணத்துக்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனவே ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகளை உருவாக்கிக் கொண்டிருக்காமல் நேரடியாக இது தொடர்பில் எம்முடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டாயினும், ஆறில் ஐந்தாயினும் தேவையான பெரும்பான்மையை வழங்க நாம் தயார்.

அதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தொடர்ந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதற்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. எனவே விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment