(இராஜதுரை ஹஷான்)
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்படும் விடயத்தில் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நிதித் தொகை பிரித்தானிய வங்கியில் வைப்பிலிடப்பட்டதா அல்லது பஹாமாஸ் தீவு வங்கியில் வைப்பிலிடப்பட்டதா என்பது தற்போதைய முரண்பாடாக உள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் தனி நபர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
பிரித்தானிய வங்கியில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வைப்பிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது பிரித்தானியா அல்ல பஹாமாஸ் தீவு என குறிப்பிடப்படுகிறது. யார் குறிப்பிடுவது உண்மை என்பது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை மூடி மறைக்க ஆரம்பத்தில் இருந்து பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. மக்கள் மத்தியில் இருந்து தோற்றம் பெறும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காகவே கொழும்பில் தற்போது இராணுவம் முகாமிட்டுள்ளது. மக்கள் பலத்தின் முன் பாதுகாப்பு படையின் பலம் வெற்றி பெறாது என்பதற்கு கடந்த கால சம்பவங்கள் ஆதாரமாக உள்ளன என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்கு அச்சமடைந்து நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. ஆகவே மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் சூழல் தோற்றம் பெற வேண்டும் அதற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment