(எம்.ஆர்.எம்.வசீம்)
மஹிந்த ராஜபக்ஷ்வை மீண்டும் பிரதமராக்கும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடமும் இல்லை. பொதுஜன பெரமுனவின் திட்டத்திலும் இல்லை. கட்சி ஆதரவாளர்களும் அவருடன் இருப்பவர்கள் சிலருமே இதனை தெரிவித்து வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறான எந்த திட்டமும் அரசாங்கத்திலும் இல்லை பொதுஜன பெரமுன கட்சியிடமும் இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ்வுடன் நெருக்கமாக இருப்பவர்களும் ஆதரவாளர்கள் சிலருமே இதனை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்ஷ்வாகும் என மே தினக் கூட்டத்தில் தெரிவித்திருந்தனர். பசில் ராஜபக்ஷ் திறமையானவர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பொதுஜன பெரமுன கட்சியை அமைத்து, சில வருடங்களில் நாட்டை ஆட்சி செய்யும் நிலைக்கு முன்னேற்றி இருந்தார். அது அவரின் திறமையால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆனால் பசில் ராஜபக்ஷ்வை அவர்கள் எந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது தெரியாது. ஏனெனில் பசில் ராஜபக்ஷ் இரட்டை பிரஜாவுரிமை உடையவர். அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதாக இருந்தால் அமெரிக்க பிரஜா உரிமையை இரத்துச் செய்ய வேண்டும். அதனை அவர் ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றே தெரிவித்து வந்திருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் சட்டப் பிரச்சினை இருக்கிறது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இருந்தபோதும் ஜனாதிபதி வேட்பாளர்கள் என பலரது பெயர்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கிறது.
அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment