(இராஜதுரை ஹஷான்)
வங்குரோத்து அடைந்தும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எடுத்துரைப்போம். தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றுகிறது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் ஆலோசகர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை செயற்படுத்தும்போது சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும். நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கு ஒட்டுமொத்த பாராளுமன்றமும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைமையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தியுள்ளது. இதனால் எதிர்வரும் நான்கு ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சகல சேவைகளுக்குமான வரி 119 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். இதை நடுத்தர மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சிறந்த திட்டங்களை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்கவில்லை. நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை கண்மூடி ஏற்றுக் கொண்டது. இதனால் நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள். இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக அவதானம் செலுத்தாது.
2024 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆகவே புதிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.
தேசிய கடன் ஒருபோதும் மறுசீரமைக்கப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் இராஜாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றுகிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைப்போம் என்றார்.
No comments:
Post a Comment