புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் - நவீன் திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, May 8, 2023

புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் - நவீன் திஸாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட மற்றும் ஜனாதிபதிக்கு நம்பிக்கையானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரையின் கீழ் மாகாண ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதன் பிரகாரம் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

தற்போதுள்ள ஆளுநர்களில் சிலரை பதவி விலகுமாறு தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் உண்மைத் தன்மை தொடர்பில் எதுவும் தெரியாது. அதேநேரம் குறித்த ஆளுநர்கள் அந்த அறிவிப்பை நிராகரிக்கவும் இல்லை. அதனால் விரைவில் ஆளுநர்களில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மேலும் ஆளுநர் பதவிக்கு எனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக முகப்புத்தகத்தில் நான் கண்டேன். ஜனாதிபதி அவருக்கு விருப்பமான, திறமையான, நம்பிக்கையான அதேநேரம் கட்சிக்கு பாரிய சேவையாற்றிய சிரேஷ்ட உறுப்பினர்களை அதற்காக பெயரிடும் என நம்புகிறோம். யார் நியமிக்கப்படுவார்கள் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரம் ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள், அவர்கள் அரசியல் செய்யும் மாகாணத்துக்கு நியமிக்கப்படமாட்டார்கள். ஏனெனில் ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள் அந்த மாகாணத்தில் அரசியல் செய்யக்கூடாது என்ற சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது. அதனால் ஜனாதிபதி அந்த சம்பிரதாயத்தை பின்பற்றி செயற்படுவார் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment