(இராஜதுரை ஹஷான்)
காட்டு சட்டத்தை இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் எந்தத் தரப்பினராலும் வெற்றி பெற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான தீர்மானத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.
சேதனப் பசளைத் திட்டம் சிறந்து. இருப்பினும் ஒரே கட்டத்தில் இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் சேதனப் பசளைத் திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
சேதனப் பசளைத் திட்டம் தொடர்பில் தவறான ஆலோசனைகளை வழங்கிய துறைசார் நிபுணர்கள் இன்று ஒன்றும் அறியாதவர்களைப்போல் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகிறார்கள். காலம் அவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்கும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. நாடு வங்குரோத்து நிலை அடைந்த பின்னணியில் அரசாங்கத்தை பொறுப்பேற்க அவர் மாத்திரமே தற்துணிவுடன் முன்னிலையானார். பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் எம்மால் வீதிக்கு இறங்க முடியாத நிலை காணப்பட்டது. காட்டு சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன வெகுவிரையில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும். பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எவராலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.
No comments:
Post a Comment