அரநாயக்க நீர்த் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் : பாடசாலை மாணவர்கள் ஆறு பேரிடம் விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 28, 2023

அரநாயக்க நீர்த் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் : பாடசாலை மாணவர்கள் ஆறு பேரிடம் விசாரணைகள் ஆரம்பம்

(எம்.வை.எம்.சியாம்)

கேகாலை, அரநாயக்க அசுபினி எல்ல நீர்த் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர்க் குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நீர்த் திட்டம் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர்க் குழாய்கள் தீப்பிடித்துள்ளது.

அரநாயக்க அசுபினியெல்ல நீர்த் திட்டத்திற்கு தேவையான குழாய்கள் உஸ்ஸாபிட்டிய பொது விளையாட்டரங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தபோது கடந்த 19 ஆம் திகதி மாலை அவற்றில் தீ பரவியுள்ளது.

பின்னர் மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பல கோடி ரூபா பெறுமதியான நீர்க் குழாய்கள் அவற்றிலிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி நீர்க் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த 6 பாடசாலை மாணவர்களும் அரநாயக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

விசாரணைக்கு பின் மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment