பாதிக்கப்பட்ட சிறுவர்கள், குற்றவாளிகளை ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பது அவசியம் : ரோஹிணி குமாரி விஜேரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

பாதிக்கப்பட்ட சிறுவர்கள், குற்றவாளிகளை ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பது அவசியம் : ரோஹிணி குமாரி விஜேரத்ன

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும், இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விசேடமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், சிறுவர்களின் அடையாளங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிட சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதாக அரச ஊடகங்களின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு ஒன்றியத்தின் அடுத்த கூட்டத்துக்கு அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்புவிடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலைமையை உயர்த்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரவாகக் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு, இலங்கையிலுள்ள சிறுவர் இல்லங்கள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கியுள்ளதாகவும் அவற்றில் பயிற்சிபெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துக்கு போதுமான ஏற்பாடுகளை ஒதுக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் முக்கியத்தும் தொடர்பில் இதன்போது விரிவாக முன்வைக்கப்பட்டது.

18 வயதைத் தாண்டிய சிறுவர்களை சமூகமயப்படுத்துவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றின் தேவை மற்றும் அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கான மாற்று பாதுகாப்பு பிரேரணைகளாக வளர்ப்புப் பெற்றோர் முறையை அறிமுகப்படுத்தல், உறவினர்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவருதல், உள்ளூர் தத்தெடுப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, மயந்த திசாநாயக்க, ஒன்றியத்தின் செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment