(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் இன்றையதினம் இலங்கைக்கு வருகை தரவிருப்பதுடன், சுமார் 12 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பொருளாதாரத்துடன் தொடர்புடைய மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதி இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி எட்டப்பட்டது.
அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான முதலாவது மதிப்பீட்டுக்கு முன்னரான வழமையான ஆராய்வுகளின் ஓரங்கமாகவே மேற்படி குழுவின் வருகை அமைகின்றது.
அதன்படி வியாழக்கிழமை (11) நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.
அதேவேளை வெள்ளிக்கிழமை (12) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரையான 4 தினங்களுக்கு இக்குழுவுடன் சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசனும் இணைந்துகொள்வார்.
இவ்வதிகாரிகள் குழு ஜனாதிபதி, நிதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment