ரணிலுடன் கலந்துரையாடி தீர்க்க முடியவில்லையென்றால் வேறு எந்தத் தலைவராலும் தீர்க்க முடியாது - சாமர சம்பத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 10, 2023

ரணிலுடன் கலந்துரையாடி தீர்க்க முடியவில்லையென்றால் வேறு எந்தத் தலைவராலும் தீர்க்க முடியாது - சாமர சம்பத்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் இந்த பாராளுமன்றத்தில் வேறு எந்தத் தலைவருடனும் தீர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்டஈடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு குறைந்த பட்ச நியாயத்தையாவது வழங்கியது ரணில் விக்ரமசிங்கவாகும். அவர் வடக்கு மக்களுக்கு நியாயத்தை வழங்கியதாலே தேர்தல்களின்போது தெற்கு சிங்கள மக்கள் அவரை தோற்கடித்தார்கள். வடக்கு மக்களுக்கு சலுகைகளை வழங்கிதாலே ரணில் விக்ரமசிங்க 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதனால் தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் இந்த பாராளுமன்றத்தில் வேறு எந்த தலைவருடனும் தீர்த்துக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபாேன்று சிங்கள மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. வடக்கு மக்களின் பிச்சினையை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

ஜனாதிபதி அவர்களுக்கு இரண்டு தினங்கள் வழங்கி இருக்கிறார். இதனை பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை ஜனாதிபதியிடம் தெரிவித்து தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து இனவாதம் பேசுவதால் எமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

சிங்களவர்களும் வடக்கில் உள்ளவர்களும் இனவாதத்தை அணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இனவாதத்தினால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது. அதேபோன்று தெற்கில் இருப்பவர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

எனவே வடக்கு மக்களுக்கு குறைந்த பட்சமேனும் நன்மை செய்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவாகும். அவரின் தலைமைத்துவத்தில் தமிழ் மக்களின் பிச்சினையை முடியுமானளவு தீர்த்துக் கொள்ள தமிழ் கட்சிகள் முயற்சித்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் இந்த பாராளுமன்றத்தில் வேறு எந்த தலைவரினாலும் தமிழ் மக்களின் பிச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment