நிதியமைச்சு தன்னிச்சையாக செயற்படக்கூடாது : வெட்கித் தலைகுனியும் செயற்பாடுகளில் அரசாங்கம் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

நிதியமைச்சு தன்னிச்சையாக செயற்படக்கூடாது : வெட்கித் தலைகுனியும் செயற்பாடுகளில் அரசாங்கம் - ஹர்ஷ டி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு தன்னிச்சையாக செயற்படக்கூடாது. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் பிரச்சினைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக முரண்பாடற்ற ஒரு தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அணியினர் ஆட்சியில் இருக்கும்வரை சர்வதேச நாணய நிதியம் அல்ல முழு உலகமும் ஒத்துழைப்பு வழங்கினாலும் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீள முடியாது. வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

சுனாமி, கொவிட், எக்ஸ்பிரஸ் பேரள் ஆகிய விவகாரங்களில் கொள்கையடித்தவர்கள் 10 கிலோகிராம் அரிசி விநியோகத்தையும் விட்டு வைக்கவில்லை. 10 கிலோ கிராம் அரிசி பொதி ஒன்றின் ஊடாக 10 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உண்மையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுகிறது.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தொழில்நுட்ப ரீதியில் ஆராய வேண்டும். பொருளாதார மீட்சிக்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பதாகவும் தேசிய கடன்களை மறுசீரமைக்கப் போவதில்லை எனவும் அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது தேசிய கடனை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடன்களை மறுசீரமைக்கும்போது ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உட்பட வங்கி ஆகியவற்றுக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பு ஏற்படும் என்பதே உண்மை. இவ்விடயத்தில் அரசாங்கம் நாட்டு மக்களிடம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சர் காலஞ்சென்ற டி.பி.இளங்கரத்னவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் வகையில் தனி நபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு தன்னிச்சையாக செயற்படக்கூடாது. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் பிரச்சினைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment