கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தினால் நாட்டுக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் - ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தினால் நாட்டுக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் - ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தி, ஊழல் மோசடிப் பணத்தை மீள பெற்றுக் கொள்ள முடியுமானால், அரசாங்கம் இந்தளவு மக்கள் மீது வரிச் சுமைகளை சுமத்தத் தேவையில்லை. அத்துடன் குற்றச்செயல் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையிடும்போது அவதானமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா தெரிவித்தார்.

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் தொடர்பில் அறிக்கையிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு திங்கட்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் வரி அதிகரிப்புகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

நாட்டில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமானால் பொருளாதார பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கும். என்றாலும், பாராளுமன்ற கோப் குழு ஊடாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த அறிக்கைகளில் அரச அதிகாரிகளால் இடம்பெற்றிருக்கும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவருகின்றன. ஆனால், கோப் குழு அறிக்கையில் வெளிவரும் விசாரணை அறிக்கை தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

அரச அதிகாரிகளின் கோடிக்கணக்கான மோசடிப் பணத்தை திருப்பி எடுக்க முடியுமானால் சாதாரண மக்கள் மீது வரிச் சுமைகளை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால், அரசாங்கம் அதனை செய்யாமல் மக்கள் மீது வரி அதிகரிப்புகளை மேற்கொண்டு, நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்கிறது.

அதனால் அரசாங்கம் மோசடிக்காரர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளாமல் மக்கள் மீது வரியை அதிகரித்து மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கி வருகிறது. அதனால் கோப் குழு விசாரணையில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும். நீதி அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும். குற்றச் செயலொன்றில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையிடும்போது அவதானமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டம் தொடர்பில் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

அதேபோன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும்போது ஜனாதிபதிக்கு தேவையான முறையில் மேற்கொள்ள முடியாது. அதற்கு படிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அண்மையில் இடம்பெற்ற குற்றவாளிகளுக்கான ஜனாதிபதி மன்னிப்பு அவ்வாறு இடம்பெற்றதா என்பது சந்தேகமாகும் என்றார்.

No comments:

Post a Comment