(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒன்றிணையப் போவதில்லை. சிறந்த அரசியல் பயணத்துக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டி மல்வத்து பீட மகாநாயக்க தேரரை திங்கட்கிழமை (15) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு வங்குரோத்து அடைந்துள்ளதுடன் அரசியல் கட்சிகளும் வங்குரோத்து நிலை அடைந்துள்ளன. ஆகவே புதிய அரசியல் முறைமை ஒன்று நாட்டுக்கு அத்தியாவசியமானது.
இளைஞர்கள், தொழில்துறையினர், ஊழல் மோசடியுடன் தொடர்புடையாதவர்கள், சமூகத்தின் மதிக்கத்தக்கவர்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தி புதிய அரசியல் கட்சியை தோற்றுவிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு வங்குரோத்து நிலை அடையப்போகிறது என்பதை அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டோம். ஆனால் எமது கருத்துக்கு அவர் மதிப்பளிக்கவில்லை. தவறான தரப்பினரின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவமளித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி இன்று சுகபோகமாக அரச வரபிரசாதங்களுடன் வாழ்கிறார்.
நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அது உறுதிப்படுத்தப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒன்றிணையப் போவதில்லை. பொருளாதார மீட்சிக்காக விரைவாக செயற்படுத்த வேண்டிய திட்டங்களை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
ஜனாதிபதியின் கருத்தைப்போல் பொருளாதார மீட்சிக்கு 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. சிறந்த திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி பகிரங்கப்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment