பிரேம்நாத் சி.தொலவத்தவின் பிரேரணையை பாராளுமன்றில் நிறைவேற்றுங்கள் : வலியுறுத்தும் சட்டத்தரணிகள், பால்புதுமையின சமூக செயற்பாட்டாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 10, 2023

பிரேம்நாத் சி.தொலவத்தவின் பிரேரணையை பாராளுமன்றில் நிறைவேற்றுங்கள் : வலியுறுத்தும் சட்டத்தரணிகள், பால்புதுமையின சமூக செயற்பாட்டாளர்கள்

(நா.தனுஜா)

பால்புதுமையின சமூகத்தினருக்கு எதிரான சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் மற்றும் பால்புதுமையின சமூக செயற்பாட்டாளர்கள், அப்பிரேரணையை பெரும்பான்மை வாக்குகள் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தண்டனைச் சட்டக் கோவையின் 365 ஆம் பிரிவைத் திருத்தியமைத்தல் மற்றும் 365 ஏ பிரிவை நீக்குதல் ஆகியவற்றின் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால்புதுமையின சமூகத்தின் செயற்பாடுகளைக் குற்றமாக்கும் சரத்துக்களை நீக்குவதற்கான தனி நபர் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்பிரேரணக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவர் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அப்பிரேரணையின் பிரகாரம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால்புதுமையின சமூகத்தின் செயற்பாடுகளைக் குற்றமாக்கும் சரத்துக்களை நீக்குவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று செவ்வாய்க்கிழமை (9) உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனையடுத்து கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் பால்புதுமையின செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது என்றும், அது முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.

சர்வதேச சட்டங்கள், பிரகடனங்கள், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மேற்கோள்காட்டி இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் பால்புதுமையின சமூகத்தின் உரிமைகளும், வாழ்வதற்கான சுதந்திரமும், சுயகௌரவமும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் தன்பாலின ஈர்ப்பு உள்ளடங்கலாக பால்புதுமையின சமூகத்தின் செயற்பாடுகள் கலாசாரத்துக்கு முரணானவையாக சிலரால் காண்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அம்பிகா சற்குணநாதன், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியினால் எம்மீது திணிக்கப்பட்ட சட்டங்களே பால்புதுமையின சமூகத்தின் செயற்பாடுகளைக் குற்றமாக வரையறுத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றைத் திருத்தியமைக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளரும், பால்புதுமையின செயற்பாட்டாளருமான விசாகேச சந்திரசேகரம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் இதற்கு அப்பால் பிரேம்நாத் சி.தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோன்று அப்பிரேரணைக்கு எதிராக மூவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் எவ்வாறு கையாண்டது என்றும், அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றைய தரப்பு சட்டத்தரணிகளால் எவ்வாறு முறியடிக்கப்பட்ட என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

மேலும் பால்புதுமையின சமூக செயற்பாட்டாளர்களான சானு நிமேஷா, ஷியாதா சாரா, அவிலாஷ், அனுஹாஸ் ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டதுடன், பால்புதுமையின சமூகத்தின் செயற்பாடுகளைக் குற்றமாக்கும் சரத்துக்களை தண்டனைச்சட்டக்கோவையிலிருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment