சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கின்றன : வழக்குக்கு மாத்திரமே நட்டஈடு போதுமானதாக அமையும் - ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 10, 2023

சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கின்றன : வழக்குக்கு மாத்திரமே நட்டஈடு போதுமானதாக அமையும் - ஜி.எல். பீரிஸ்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் வழக்குத் தாக்கல் செய்வது 23 மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கின்றன. கிடைக்கப் பெறும் நட்டஈட்டு தொகை வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும், நாட்டுக்கு ஏதும் மிகுதியாகாது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் கடற் பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி கடல் வளங்களை இல்லாதொழித்த எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் உரிய கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய எந்த நடவடிக்கையும் கடந்த 23 மாதங்களாக எடுக்கப்படவில்லை. இறுதி தருணத்தில்தான் அவசரமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கிறது.

இந்த கப்பல் விவகாரத்தில் சாமர குணசேகர என்பவருக்கு 250 மில்லியன் டொலர் இலங்கை நாணய அலகின் பிரகாரம் 80 ஆயிரம் மில்லியன் ரூபா இலஞ்சம் பிரித்தானிய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஒரு தனி நபர் வங்கிக் கணக்கில் இவ்வாறான பாரிய நிதியை வைப்பிலிடும்போது வங்கி பல கேள்விகளை கேட்கும். பிரித்தானிய வங்கி கட்டமைப்பில் நிதி தூய்மைப்படுத்தல் சட்டம் முழுமையாக கவனத்திற் கொள்ளப்படும். ஆகவே நீதியமைச்சரின் கருத்து தொடர்பில் இதுவரை உண்மைத்தன்மை வெளிப்படவில்லை.

நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கான வழக்கினை சிங்கப்பூர் நாட்டின் வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை நீதியமைச்சர் நியாயப்படுத்துகிறார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். இந்த வழக்கு விவகாரம் மக்களின் கவனத்தில் இருந்து தூரமாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு செலவாகும் நிதி இந்த நட்டஈடு ஊடாகவே வழங்கப்படும். ஆகவே சட்ட நிறுவனங்கள், வழக்கு விசாரணை ஆகியவற்றுக்கு மாத்திரம் நட்டஈடு தொகை போதுமானதாக அமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் கிடைக்காது. கடல் வளங்களுக்கு ஏற்பட்ட அழிவு மாத்திரம் மிகுதியாகும் என்றார்.

No comments:

Post a Comment