இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கடித மூலம் கேட்டுள்ளார்.
அண்மைக்காலமாக போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பொது போக்குவரத்துகளையே பெரும்பாலும் உபயோகப்படுத்தி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாடம் தொழில்களுக்கு செல்வோர் பொது போக்குவரத்து சேவையையே நம்பியுள்ளனர்.
குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் ஒரு தரப்பினர் பொது போக்குவரத்து முன்னெடுக்கப்படும் வீதிகளில், பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த இரண்டு தினங்களில் குருநாகல் கணேவத்த வீதி மற்றும் பொலனறுவை பிரதேசத்திலும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வீதிகளிலும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
இதனைக் கவனத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அது தொடர்பில் அறிவுறுத்தி இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்வோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment