ஜனக்க ரத்னாயக்கவுக்கு அரசாங்கம் ஏன் இந்தளவு அச்சப்படுகிறது : சபையில் கேள்வியெழுப்பிய ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

ஜனக்க ரத்னாயக்கவுக்கு அரசாங்கம் ஏன் இந்தளவு அச்சப்படுகிறது : சபையில் கேள்வியெழுப்பிய ஹக்கீம்

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்றுத்துறையின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஜனக்க ரத்னாயக்கவுக்கு அரசாங்கம் ஏன் இந்தளவு அச்சப்படுகிறது என கேட்கிறேன் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் இவ்வாறு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதற்தடவையாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது அவர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சியாகும். நிறைவேற்றுத்துறைக்கு எதிராக அந்தக் ஆணைக்குழுக்கள் செயற்படும்போது, இவ்வாறான செயன்முறையை செய்கின்றனர். நிறைவேற்றுத்துறையின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவே இது மேற்கொள்ளப்படுகிறது.

ஆணைக்குழுவின் தவிசாளர்களை பதவி நீக்குவதற்கு நிலையியல் கட்டளைகளில் இந்த செயன்முறைகள் தொடர்பில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தவிசாளர்களுக்கு தங்களின் நியாயத்தை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

ஜனக்க ரத்னாயக்க பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முயன்றுள்ளார். இவ்வாறான நிலைமையிலேயே அவரை பதவி நீக்க முயற்சிக்கப்படுகின்றது. இது நிறைவேற்றுத்துறையின் ஒருதலைப்பட்ச தீர்மானமாகும்.

அத்துடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 20 மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

இதேவேளை கவிஞர் அஹ்னாப் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் தொடர்பில் ஜெனிவாவிலும் பேசப்படுகின்றது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கில் மூன்று பேரை சீஐடியினர் சாட்சியங்களாக கைது செய்து அவர்களை அச்சுறுத்தினார்கள்.

இதன்போது ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியங்களை இட்டுக்கட்டினார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் ஆலோசகராக இருக்கின்றது.

இந்த திணைக்களம் சிஐடியின் சில காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டி இப்படி மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும். அதனால் நீதிமன்றத்தில் வழக்குகள் முடியாமல் இருக்கின்றன. சாட்சியங்கள் இட்டுக்கட்டப்படுகின்றன. இதனை சரியான இடங்களில் பேச வேண்டும்.

அத்துடன் இந்த விவாதத்தை பார்வையிடுவதற்காக ஜனக்க ரத்னாயக்க பாராளுமன்ற செயலாளரிடம் அனுமதி கோரி இருந்தார். ஆனால் இன்று பார்வையாளர் கலரி மூடப்படுவதால் அனுமதி வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறானதொரு நிலையை காணவில்லை. பாடசாலை மாணவர்கள் பார்வையாளர் கலரியில் இருக்கின்றனர். அதனால் ஜனக்க ரத்னாயக்கவுக்கு அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும் என கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment