வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்த முகவர் கைது : 31 முறைப்பாடுகள் பதிவு ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 17, 2023

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்த முகவர் கைது : 31 முறைப்பாடுகள் பதிவு !

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து சட்ட விரோதமான முறையில் பணம் பெற்றுவந்த ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் பணியகத்தின் பிரதான காரியாலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகவர் நிறுவன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் முகவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இந்நபர், கட்டார் நாட்டில் பல்வேறு தொழில்களுக்கு அனுப்புவதாக குறித்த நபர் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தன்னை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்து, சந்தேகநபருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்துள்ளன.

அதன் பிரகாரம், கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சந்தேகநபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயத்துக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

அவ்வழைப்புக்கு அமைய, குறித்தநபர் பணியகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, 42 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை பல நபர்களையும் ஏமாற்றி சந்தேகநபர் பெற்றுக் கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

சந்தேகநபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகவர் நிறுவன அனுமதிப்பத்திரம் இல்லாமல் சில காலமாக தொழிலுக்காக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து, இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது.

சந்தேகநபரை இன்று (17) புதன்கிழமை கல்கிஸை நீதவான நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, 5 இலட்சம் ரூபா அடிப்படையில் இரண்டு சரீர பிணையில் விடுவிக்கவும் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment