சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை, அமைச்சர் மனுஷ நாணயக்கார சபையில் 'புலி' (கொட்டியா) என விளித்ததையும் அமைச்சர் கண்டித்துள்ளார்.
கொழும்பில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை (28) இடம்பெறவுள்ளது. அரச பங்காளிக் கட்சி என்ற வகையில் அதற்கு ஆதரவு வழங்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின், அங்கீகாரம் கிடைத்ததால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் நன்மைகள் பற்றி எவரும் கதைப்பதில்லை.
எது, எப்படி இருந்தாலும், நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் பொருளாதார திட்டங்களுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கப்படும். அதேபோல பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இதற்கு ஆதரவு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை, அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினரை (சாணக்கியனை) அமைச்சர் (மனுஷ நாணயக்கார) 'கொட்டியா' (புலி) என விமர்சித்திருந்தார். இது தவறாகும். நாடாளுமன்றத்தில் சபை நாகரிகம் பின்பற்றப்பட வேண்டும்.
ஓர் உறுப்பினரின் இனத்தை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்புடைய விடயமல்ல.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிக்கு ஆளுநர் பதவியை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கலாம். அது எந்த மாகாணம் என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறந்த நிர்வாகி. அவர் மாகாண துணை முதல்வராக செயற்பட்டுள்ளார். மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கியுள்ளார். மலையக தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி கிடைப்பது மகிழ்ச்சி. இதற்கு அனைவரும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment