சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (28) இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய காரணத்தினால் கொழும்பிலிருந்து வௌியேற வேண்டிய நிலை ஏற்பட்டமையே இதற்கான காரணம் என அறிக்கை மூலம் அவர் அறிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக் கொள்வது தவறான விடயமல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள பாதகமான நிபந்தனைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர், அவற்றை எளிமையாக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு நிதியில் மாத்திரமன்றி வௌிநாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதியிலும் பாரிய ஊழல் மோசடிகளே இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய ஊழல் மோசடிகளுடன் சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வௌிநாட்டுக் கடனை, ஊழல் மோசடிகளுக்காக அன்றி வெளிப்படைத்தன்மையுடன் நாட்டின் சாதாரண மக்களின் வறுமை நிலையை போக்குவதற்காக முதலீடு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment