எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலங்கையர் ஒருவர் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். வழக்குத் தாக்கல் விவகாரத்தை சட்டமா அதிபர் திணைக்களமே மேற்கொண்டுள்ளது. அவ்வாறாயின் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புடைய நபரே இலஞ்சம் பெற்றிருக்க வேண்டும். நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் கடற்பரப்பில் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தீ விபத்துக்குள்ளான நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றது.
நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே கடற்படைத் தளபதிக்கு அறிவித்துள்ளதாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.
நீதியமைச்சரின் முறையற்ற கருத்தால் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிரான கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நியூ டைமன் கப்பல் விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் தொலைபேசியில் உரையாடியபோது அவர் 'பைத்தியமா, முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் கப்பலை வெளியேற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நீங்களும் இருந்தீர்கள். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவது அவசியமானது என்று குறிப்பிட்டீர்கள் 'என்று குறிப்பிட்டார்.
மறுபுறம் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவிடம் தொலைபேசியில் உரையாடியபோது அவர், 'இந்த விடயத்தில் நீதியமைச்சர் உங்களை ஏன் தொடர்புப்படுத்தினார் என்பதை நான் அறியவில்லை. நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாக நானே கடற்படைத் தளபதிக்கு அறிவித்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நியூ டைமன் கப்பலில் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான எண்ணெய் சேமிக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக கப்பலில் ஏற்பட்ட தீ தீவிரமாக பரவி கப்பல் கடலில் மூழ்கினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு யார் உத்தரவு பிறப்பித்தது என்பது தற்போது தெளிவாகி விட்டது. ஆகவே இவ்விடயத்தில் என்னை தொடர்புப்படுத்தி கருத்துரைப்பதை நீதியமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிணைமுறி மோசடியாளர், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புதாரி என்று கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவரை புகழ்பாடுகிறார்கள்.
நாட்டின் நிதியை நான் மோசடி செய்யவில்லை. அதனால் அரசாங்கத்தின் குறைபாடுகளை தற்துணிவுடன் சுட்டிக்காட்டுவேன். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஆட்சியாளருக்கு புகழ்பாட வேண்டிய தேவை கிடையாது.
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலங்கை பிரஜை 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களமே மேற்கொண்டது, அவ்வாறாயின் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புடைய நபரே இலஞ்சம் பெற்றிருக்க வேண்டும்.
இலஞ்சம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, ஆனால் சாட்சியம் இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் அறிவில்லாதவர்கள் அல்ல என்றார்.
No comments:
Post a Comment