(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை, குற்றஞ்சாட்டப்பட்ட எவரும் அமைச்சரவையிலும் இல்லை. குண்டுத் தாக்குதலுக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புண்டு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) பாராளுமன்ற சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் நாலக கொடஹேவா ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் இன்று அவருக்கு புகழ்பாடுவதாக குறிப்பிட்டார். இவரது உரையை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் இன்று அவருக்கு சார்பாக செயற்படுகிறார்கள், மனசாட்சிக்கு எதிராக செயற்பட முடியாது என்பதால் எதிர்க்கட்சி பக்கம் செயற்படுவதாக நாலக கொடஹேவா குறிப்பிடுவது அடிப்படையற்றது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை.
இவர்தான் (நாலக கொடஹேவாவை நோக்கி) முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனை வழங்கினார். கடலையும், கடல் வளங்களையும் கொள்ளையடித்தார். அத்துடன் கப்பல் விபத்தை தோற்றுவித்து மீனவர்களின் வாழ்க்கையையும் நெருக்கடிக்குள் தள்ளினார் என்றார்.
No comments:
Post a Comment