(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 'இனவாதி, புலி' என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி 'இனவாதி, முட்டாள்' என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து எனக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டார்கள். இவ்விருவரின் கருத்துக்களால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விருவரும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்வதற்கு தடை விதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து உரையாற்றியிருந்தால் அதற்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன், அந்த வார்த்தைகளை நீக்கிக் கொள்வதுடன் உரிய பாராளுமன்ற உறுப்பினரிடம் மன்னிப்புக் கோருகிறேன் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.
அமைச்சர் அலி சப்ரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன். எனது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கியத்துக்கு சார்பாக எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அத்துடன் அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாட்டை வரவேற்று, அதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாற்றியதாவது,
நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி, தேசியப்பட்டியல் உறுப்பினர் அல்ல. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொறுப்பு மற்றும் உரிமை எனக்கு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் உட்கட்டமைப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இந்த வேளையில் ஏற்பட்ட தர்க்கத்தின்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார என்னை இனவாதி, புலி என விமர்சித்தார்.
மறுபுறம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி என்னை இனவாதி, முட்டாள் என்று விமர்சித்தார். பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்தார்கள். இதனால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விருவரும் இரு வார காலங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் அறிவித்தலை விடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சாணக்கியன் இராசமாணிக்கம் தன்னை தமிழ் மக்களின் பாதுகாவலன் என்று நினைத்துக் கொள்கிறார்.
2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷர்களின் பிரபல்யத்துடன் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதற்காக ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்படுகிறார்.
முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நான் கருத்துரைத்தால் சிங்கள மக்கள் எனக்கு ஆதரவு வழங்குவார்கள், நான் அவ்வாறு செயற்படப் போவதில்லை, அவ்வாறான அரசியல் கலாசாரத்தை பின்பற்றுவதுமில்லை. நான் ஒட்டு மொத்த இலங்கையர்களுக்காகவும் அரசியல் செய்கிறேன், அரசியலில் ஈடுபடுகிறேன்.
நீதியமைச்சராக பதவி வகித்தபோது பயங்கரவாத தடுப்புக் காவலில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை கால தேவைக்கு அமைய திருத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்து. திருத்த யோசனைகளை முன்வைத்தேன்.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் பலமுறை கடுமையான எதிர்ப்புக்களை முன்வைத்தேன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நன்கு அறிவார்.
எமது சமூகத்துக்காக செய்த விடயங்களை நான் பகிரங்கப்படுத்தி, அரசியல் இலாபம் தேடவில்லை.
நான் ராஜபக்ஷர்களுக்காக முன்னிலையாகினேன் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை. ராஜபக்ஷர்களின் செயற்பாடு பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை மறுக்கவில்லை, அதேபோல் ராஜபக்ஷர்கள் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.
நான் ராஜபக்ஷர்களுக்காக என்றும் முன்னிலையாகுவேன். பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வகையிலான வார்த்தைகளை பிரயோகித்திருந்தால் அதற்காக கவலையடைகிறேன். அந்த வார்த்தைகளை நீக்கிக் கொள்கிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஷ 225 உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே மக்கள் தெரிவு தேசியப்பட்டியல் என்ற வேறுபாடு கிடையாது. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உண்டு. பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதால் விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது. ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும்.
அமைச்சர் அலி சப்ரி 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையை ஹன்சாட் பதிவில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளேன். அமைச்சரே நீங்கள் 'உரிய உறுப்பினரை நோக்கி நீங்கள் இனவாதி, முட்டாள்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதனை நீக்கிக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு கௌரவமான மதிக்கத்தக்க நபர் என்பதால் நான் உங்களிடம் இதனை வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உரையின்போது ஏற்பட்ட தர்க்கத்தில் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருத்தமடைகிறேன், அந்த வார்த்தைகளை நீக்கிக் கொள்வதுடன் எனது நண்பரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். இதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பாராளுமன்ற உரைகளின்போதும், அரசியல் கருத்து வெளியிடலின்போதும் 'புலி' என்ற வார்த்தையை பிரயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment